முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது அதிகாரத்திமிர் இல்லையா? - சீமான் கேள்வி
இதுவரை முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது அதிகாரத்திமிர் இல்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறையிலிருந்த நபர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

விசாரணை கைதியான சபரிவர்மனுக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சபரிவர்மன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த காவல் மரணத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிகாரத்திமிர் இல்லையா?
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள பதிவில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும்.

எந்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது.
முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா?
இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குறைபாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா?
திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால் இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது?
சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்திறக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா?
திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?@CMOTamilnadu @TVKVijayHQ
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 14, 2026
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில்…
ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.