திரைப்படம் பார்த்து அமைச்சர்கள் கண்ணீர் வடிப்பது வெட்கக்கேடானது - சீமான் காட்டம்

Seeman Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jul 24, 2026 02:48 PM GMT
Report

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீது சீமான் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சீமான் விமர்சனம்

காவிரி பாசன நீர் வராததால் தமிழ்நாட்டு விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

திரைப்படம் பார்த்து அமைச்சர்கள் கண்ணீர் வடிப்பது வெட்கக்கேடானது - சீமான் காட்டம் | Seeman Slams Tvk Ministers Cried For Jananayagan

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வறண்டு கிடக்கும் காவிரி நதிப் பார்த்தும், வாடிக் கிடக்கும் நெற்பயிர்கள் பார்த்தும், நாளும் தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அது குறித்து அணுவளவும் கவலையின்றி, தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் திரையரங்கில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது! வன்மையான கண்டனத்துக்குரியது.

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய நீர் இல்லாததால் இதுநாள் வரை திறக்கப்படாததால் வேதனையில் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

குறுவை சாகுபடிதான் பொய்த்துப்போனது, குறைந்தபட்சம் சம்பா சாகுபடிக்காவது காவிரி பாசன நீர் திறக்கப்படுமா என்று டெல்டா விவசாயிகள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில், ஒரு சொட்டு நீர்கூடத் தரமுடியாது என்று கர்நாடகாவை ஆளும் காங்கிரசு அரசு கை விரித்துவிட்டது.

காங்கிரசு கட்சியைக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கி, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்துள்ள தவெக அரசு, கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு இதுவரை ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை.

கூட்டணிக் கட்சியான காங்கிரசு ஆளும் கர்நாடக அரசிடம் சுமூகமாக பேசி காவிரி நீரைப்பெற்றுத் தரத்தான் தவெக அரசிற்கு திராணி இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக் கூடத் துணிவு இல்லையா?

அண்மையில் காவிரி நீர் இருப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டம் முடிந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் முதல் வாரம் கூடி ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தது கண்டு, வேளாண் பெருங்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆலோசனை நடத்துவதற்கு ஏன் ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருக்க வேண்டும்? பேச்சுவார்த்தையோ, சட்டப்போராட்டமோ விரைந்து நடவடிக்கை எடுத்து, காவிரிப்பாசன நீரைப் பெற்றுத்தருவது ஒன்றே விவசாயிகளின் வேதனை துடைக்கும் அருமருந்தாகும்.

அதைவிடுத்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவே ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிப்பது காவிரிப்பாசன விவசாயிகளைக் கண்ணீர் கடலில் தவிக்கவிடும் கொடுஞ்செயலாகும்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் அரிசி விலை நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை 25 ரூபாய் வரை அதிகரித்து, கடைகளில் கிலோ 85 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.

இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து, நெல் உற்பத்தி மேலும்பாதிக்கப்படுமாயின், தமிழ்நாட்டில் அரிசியின் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு உயரும்.

அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டால், அதற்கு காவிரி நீரைப் பெற்றுத்தராத தவெக அரசின் அலட்சிய செயல்பாடே முழுமுதற் காரணமாகும்.

ஆகவே, கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் மாதம் வரை காத்திராமல், அடுத்தகட்ட நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கி, விரைந்து காவிரிப்படுகை விவசாயிகளின் கண்ணீர் துடைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.