தனியார் பள்ளிகளுக்காக உருகும் தவெக அரசு - விளாசிய சீமான்

Ministry of Education Tamil nadu Seeman
By Karthikraja Jul 06, 2026 02:05 PM GMT
Report

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா?

இந்த அரசு கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.  

தனியார் பள்ளிகளுக்காக உருகும் தவெக அரசு - விளாசிய சீமான் | Seeman Slams Minister Raj Mohan Concern Pvt School

பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? 

தனியார் பள்ளிகளுக்காக உருகும் தவெக அரசு - விளாசிய சீமான் | Seeman Slams Minister Raj Mohan Concern Pvt School

தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா?

உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா?

தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

தனியார் பள்ளிகள் குறித்து கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை.

போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?

தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

தனியார் பள்ளிகள் குறித்து உள்ளம் உருகும் தவெக அரசு

ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு,

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா?

தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. 

ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.