தூய்மை பணியை தனியாருக்கு கொடுத்தால் அரசின் வேலை என்ன? சீமான் கேள்வி
தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் தூய்மை பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் கலந்து கொண்டு, போராடி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
சீமான் கேள்வி
இதனை தொடர்ந்து செய்தியர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, 12,000 தூய்மை பணியாளர்களை பணிநீக்கம் செய்வதை கண்டித்து அறிக்கை விட்டார். மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என அறிவித்தார்.
தூய்மை பணியை தனியாருக்கு வழங்கினால் அரசுக்கு என்ன வேலை? போக்குவரத்து, கல்வி, மின் உற்பத்தி, மின் விநியோகம் என அனைத்தும் தனியாருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், மது விற்பனையை மட்டும் அரசு நடத்துகிறது. இதனை சமூகம் ஏற்கிறதா?
ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.2300 கோடி அரசு வழங்குகிறது. தமிழக அரசு ரூ.23,000 தனியார் நிறுவனத்துக்கு அளித்தால், அந்த நிறுவனம் ரூ. 16,000 ஊதியத்திற்கு ஆள்களை வேலைக்கு எடுக்கிறது.
12 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்வதில் அரசுக்கு என்ன இடையூறு உள்ளது? போதிய நிதி இல்லை என அரசு கூறுகிறது.
தமிழ்நாட்டில் தண்டச்செலவுகள்
ஆனால், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. மகாபலிபுரத்தில் ரூ.540 கோடியில் கலையரங்கம் கட்டியது எதற்காக? தமிழ்நாட்டில் தேவையில்லாத தண்டச் செலவுகள் எத்தனை கோடி செய்யப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் ஏன், போராடும் தூய்மை பணியாளர்களுடன் வரவில்லை. இல்லம் தேடி வரும் அரசு திட்டத்தின் கீழ் ஏன் தூய்மை பணியாளர்களின் வீட்டிற்கு அரசு வரவில்லை.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்தால், அவர்களை பணியில் இருந்து நீக்கி விட்டு, வடமாநில தொழிலாளர்களை தனியார் நிறுவனம் பணியில் அமர்த்தும். இப்படி மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது தான் அரசின் கொள்கை முடிவா?" என பேசினார்.