அனைவரும் வீதிக்கு வந்துவிட்டனர்; இதற்கு பெயர் நல்லாட்சி - மோசமாக சாடிய சீமான்!
திமுக அரசை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சீமான்
கடலூர், சிதம்பரத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீர்த்தவர்கள் நினைவை போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
முன்னதாக இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மஹால் ஒன்றில் நடைபெற்றது. அந்த சமயத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அடிக்கடி பிரதமரை சந்தித்து வருகின்றனர். ஆனால் அந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்து ஒரு தகவலும் வெளியிடப்படுவதில்லை. மக்கள் முகத்திற்கு முன்னால் காட்டிய எய்ம்ஸ் செங்கல்லை பிரதமர் முகத்திற்கு முன்னால் காட்டி இருக்கலாம்.
இதுதான் நல்லாட்சியா?
நீட் தேர்வு எதிராக 50 லட்சம் கையெழுத்து வாங்கியதையும் அவரிடம் காண்பித்திருக்கலாம். நாட்டின் முதன்மை பணக்காரராக திகழும் அதானி தமிழகத்திற்கு எதற்கு வந்தார்? யாரை சந்தித்தார் என்ற ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இது நாடா? அல்லது மர்ம குகையா?
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதும் படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகியுள்ள நிலையில் பலம் வாய்ந்த கப்பற்படையாக திகழும் இந்திய கடற்படை யாரை யாரிடமிருந்து பாதுகாக்க கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
சமூக நீதி என பேசும் திமுக சேலம் மாவட்டம் ஓமலூர் தீண்டாமை சுவர் கட்டுகிறது. மேலும் ஆசிரியர்,மருத்துவர், செவிலியர்,மாணவன் மீனவன் என அனைவரும் போராட வீதிக்கு வந்துவிட்டனர், ஆனால் இதற்கு பெயர் நல்லாட்சி” என கடுமையாக சாடியுள்ளார்.