ஜெம் வீரமணி வழக்கில் திமுக அரசின் கொடுந்துரோகம் - சீமான் கண்டனம்
seeman slams dmk for not arrest gem veeramani: ஜெம் வீரமணி வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகம் என சீமான் கூறியுள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு
பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதான வீரமணி, சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்வதற்காக தேனாம்பேட்டையில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகித்து வந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வீரமணியிடம் பணிபுரிந்து வந்த கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில் தனது பெயரை சேர்க்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள் முதல் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வரை ரூ 70 கோடிக்கு வீரமணி செட்டில்மென்ட் செய்ததாக கூறப்படுகிறது.
யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது, யாருக்கெல்லாம் சிறுமிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீமான் கோரிக்கை
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர்க்கும் அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோர வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன; பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன.
கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட துஸ்பிரயோக குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.
திமுக அரசின் கொடுந்துரோகம்
முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது.
பெண் குழந்தை துஸ்பிரயோகம் செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்பட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது.
மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான துஸ்பிரயோக வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும்.
இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது, நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாக செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுவுமான செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது.
உச்சபட்ச தண்டனை
பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியமானதாகும்.
இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது.
இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன.
பொள்ளாச்சி கொடூரம், சிவகங்கைச்சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான துஸ்பிரயோகம் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக் காட்டுகின்றன.
குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கிறது.
ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை? இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பெண்களைப் போற்றி மேடைகளில் பேசியதெல்லாம் எவ்வளவு போலித்தனமானது? என்பதை நாட்டு மக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக, தவெக எனும் மூன்று கட்சிகளுமே பெண்களுக்கு மாதா மாதம் தொகையை வழங்குவதை மட்டுமே தங்களது அதிகபட்சமான பெண்ணுரிமைச்செயல்பாடு எனக் கருதிக் கொண்டு, செயல்படுவது மிக மோசமானப் போக்காகும்.
ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று, பயமின்றிப் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புறச்சூழலை உருவாக்குவதே அவர்களுக்கு அளித்திட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.
இத்தோடு, பெண்களுக்கும், பிஞ்சுக்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டுமானால், அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே, பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி, உடந்தையாக இருந்த குற்றவாளிகளான சாந்தி, மகேந்திரசிம்மன் மட்டுமின்றி, இதற்குப் பின்னால் வலைப்பின்னலில் இருக்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட ஒட்டுமொத்த குற்றச் சங்கிலியையும் கண்டறிந்து, அத்தனைப் பேரையும் கைதுசெய்ய வேண்டும்.
இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil