அண்ணாமலைக்கு எதிராக டம்மி வேட்பாளர்!! திமுக - பாஜக இரு கட்சிகளுமே கூட்டு தான் - சீமான்
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சீமான், மத்திய - மாநில ஆளும் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
சீமான் பரப்புரை
தனித்து தான் போட்டி என்று எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதியானவராகவே இருக்கிறார் சீமான்.அதுவே அவருக்கு ஒரு பலமாக மாறியுள்ளது. 20 ஆண்கள் 20 பெண்கள் என சரிசமமாக வேட்பாளர்களை களமிறங்கியுள்ள சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றார்.
கட்சி சின்னம் பறிக்கப்பட்டது, சின்னம் மற்றொரு கட்சிக்கு கொடுக்கப்பட்டது, தமிழக மீனவர்கள் விவகாரம், சுயேட்சைகளுக்கு சின்னம் கொடுக்கப்பட்டது, மாநில நிதி புறக்கணிப்பு என அடுக்கடுக்கான விமர்சனங்களை அவர் மத்திய - மாநில அரசுகள் மீது வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.
பணம் பறிப்பதில்..
காஞ்சிபுரம் மக்களவை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமாரை ஆதரித்து மதுராந்தகம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவர் பேசியது வருமாறு, அதானி பணம் என்று எதுவுமே கிடையாது, அனைத்தும் மோடியின் பணம். அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி மிரட்டி அநேக நிறுவனங்களிலும் மோடி பணம் வாங்கினார்.
எங்கெங்கு ரெய்டு நடந்ததோ, அங்கெல்லாம் பாஜக பணம் பெற்றுள்ளது. அதே போல தான், திமுக லாட்டரி மார்டினிடம் 550 கோடி ரூபாய் வாங்கியதுபோல், பாஜகவும் பெற்றுள்ளது.
கொள்கையாக திமுக - பாஜக வேறு என்பார்கள். ஆனால் மிரட்டி பணம் வாங்குவதில் இருகட்சிகளுமே கூட்டுதான். மோடியை வரவிடக் கூடாது - பாஜகவை எதிர்க்கிறோம் என்றெல்லாம் கூறும் திமுக கோயம்புத்தூரில் வேலையே செய்யவில்லை.
ஸ்டாலின் திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், ஏன் கோவையில் நடத்தவில்லை. அனைத்தும் நாடகம். இதை திமுகவால் மறுக்க முடியுமா?
திமுக அண்ணாமலைக்காக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கேலோ விளையாட்டு நிகழ்வுக்கு பிரதமர் மோடி ஏன் வர வேண்டும். ஆ.ராசாவை தவிர, திமுக தலைவர்கள் யாருமே பாஜகவை எதிர்த்து பேசவில்லை.