வரிகொடா இயக்கத்தை முன்னெடுப்பதை தவிர வேறு வழியில்லை - சீமான்
பாஜகவுக்கு வாக்களிக்காததால் பட்ஜெட்டில் தமிழக மக்கள் பழி வாங்கப்பட்டதாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்
2024-25 நிதி ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நாடாளுமன்றதில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
சீமான்
இந்த பட்ஜெட் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2024ஆம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.
ஆந்திரா பீகார்
தங்கம், வெள்ளி, அலைபேசி உள்ளிட்ட விலை உயர் ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்கூட அன்றாடம் மக்களின் பசியைப்போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வேளாண்மையை முற்று முழுதாக அழித்துவிட்டு ‘2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம்’ என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகாருக்கு 26000 கோடிகளும், ஆந்திராவிற்கு 15000 கோடிகளும் ஒதுக்கியுள்ள இந்நிதிநிலை அறிக்கை மூலம், இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வரிகொடா இயக்கம்
மேலும், நாட்டிலேயே ஆந்திராவில் மட்டும்தான் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளதா? தமிழ்நாட்டில் இல்லையா? இந்தியாவிலேயே அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்? தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா?!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 23, 2024
இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை… pic.twitter.com/o0fjVAxEKP
தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி, வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாததைக் கண்டித்து 'வரிகொடா' இயக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு வேறுவழியில்லை எனும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது பாஜக அரசு.
ஒட்டுமொத்தமாக பாஜக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும். என கூறியுள்ளார்.