2026 தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை - சீமான் பரபரப்பு
திமுக அதிமுகவிற்கு பெரிய வித்தியாசம் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு நேரெதிரான கொள்கை கொண்ட கட்சி பாஜக. அருந்ததியர் 3% உள் ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? மக்கள்தொகை கணக்கெடுப்பும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும் என கூறினார்.
திருப்பதி லட்டு
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்த கேள்விக்கு, "இது குறித்து லட்டு தயாரித்த நிறுவனத்திடம் தான் கேள்வி கேட்க வேண்டும். சாப்பிட்டவர்கள் எல்லாம் உயிரோடு தானே இருக்கிறார்கள். இதை நாட்டின் பெரிய பிரச்சனையாக கொண்டு செல்வது சரி இல்லை என பதிலளித்தார்.
மது கொள்கை குறித்த கேள்விக்கு ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் ஒரு மது உள்ளது. அதே போல் எங்களுக்கு கள். கள் உணவின் ஒரு பகுதி. பனம் பால், தென்னம்பால், கள் ஆகியவரை திறந்து விட்டு மதுக்கடைகளை மூடி விடுவோம். இதுதான் எங்கள் மதுக்கொள்கை. கள் உணவின் ஒரு பகுதி.
நாங்கள் வேளாண்மையை முன்னுறுத்தி தற்சார்பு பசுமை பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புகிறோம். பாலின் சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி. சாராயத்தின் சந்தை மதிப்பு 50,000 கோடி. பால் ஆந்திராவிலிருந்து தான் தமிழ்நாட்டுக்கு வருகிறது. சாராயம் விற்கும் போது மாடு வளர்ப்பதில் என்ன பிரச்சினை?
அரசு வேலை
சாராயம் விற்கும் வேலையை அரசு வேலை ஆக்கும் போது, ஆடு மாடு வளர்த்தல், பட்டு பூச்சி வளர்த்தல், நெசவு செய்தல் ஆகியவற்றை அரசு வேலை ஆக்க முடியாதா என கேள்வி எழுப்பினார்.
சாதி, மதம், சாராயம், பணம், திரை கவர்ச்சி இந்த 5 காரணிகள் புரட்சிக்கு தடையாகியுள்ளது. மக்கள் என்னை நம்பும் காரணம் யாருடனும் கூட்டணி சேர மாட்டான் என்ற நம்பிக்கைதான். தமிழகத்திலும் அரசியல் புரட்சி நடக்கும். 2026 தேர்தலில் மைக் சின்னம் கிடையாது. என் எண்ணத்திற்கேற்ற சின்னத்தில் நிற்போம்.
திமுக அதிமுகவிற்கு பெரிய வித்தியாசம் இல்லை. இவர்கள் கட்சி கொடியில் அண்ணா இருப்பார். அவர்கள் கொடியில் இருக்க மாட்டார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டு கட்சியிலும் ஊழல், மணல் கொள்ளை எல்லாம் உண்டு. பாஜகவிற்கு காங்கிரஸிற்கும் என்ன வித்தியாசம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.