அந்த 4 கட்சிகளுமே எதிரிகள்தான்; இந்த முறையும் தனித்தே போட்டி - சீமான்
2026 தேர்தலில் தனித்தே களம் காண்போம் என சீமான் தெரிவித்துள்ளார்.
தனித்தே போட்டி
கோவையில் மே 18 தமிழினப் பேரெழுச்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகையில்,
“கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை. 8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம்.
ஆயிரக்கணக்கான கோடி பணத்தை தாண்டி , சாராயத்தை தாண்டி, சாதி மதத்தை தாண்டி , இந்திய பிரதமர் யார் என்று தேர்ந்தெடுக்கும் இடத்தில் நமது சின்னத்தை தேடித்தேடி கண்டுபிடித்து வாக்களித்திருக்கிறார்கள் மக்கள் . தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலே தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து இருப்பது மானத் தமிழ் மக்களின் மதிப்பு மிக்க வாக்குகளால்தான். தமிழர்களுக்கு திமுக,அதிமுக காங்கிரஸ், பாஜக இந்த நான்கு கட்சிகளும் எதிரிகள்தான்.
சீறிய சீமான்
ஈழத்தில் போரை நடத்தியது இந்தியா , உடன் நின்றது திமுக, போராடி நிறுத்த வேண்டிய இடத்தில் இருந்தது அதிமுக, பாஜக. மாற்று என வந்தவர்கள் எல்லோரும் திமுக பாஜக காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஏமாற்றியது தான் மிச்சம். திமுக அதிமுகவிற்கு என்ன வேறுபாடு, பாஜக காங்கிரஸ் கட்சிக்கு என்ன வேறுபாடு.
எதில் இருந்து மாற்று, எல்லா கட்சிகளும் ஒன்றுதான். நாம் தமிழர் கட்சி இதுவரை ஆட்சிக்கு வரவில்லை ஆனாலும் நம்மை விமர்சிக்கிறார்கள் என்றால் எங்கே நாம் ஆட்சிக்கு வந்து விடுவோமோ என்கிற பயம். மக்களோடு சேர்ந்து வரும் 2026 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.
அதுவும் விவசாயி சின்னத்தில் என் எண்ணம் மட்டும் சின்னம் அல்ல சின்னமே நான்தான். நம் இலக்கு உறுதி செய்யப்பட்டு விட்டது! நம் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது! நம் பயணம் மிகச்சரியானது! தூரம் மிகச்சற்று தூரத்தில்! பாதையை குறைக்க வேண்டியதில்லை, மாறாக நம் கால்களை உறுதிப்படுத்துவோம்!
அடுத்தவன் தோள்மேலே ஏறி நின்று உயரமானவன் என்று காட்டுவதை விட தனித்து நின்று நம் உண்மையான உயரத்தை காட்டுவது மேலானது. தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலே தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து இருப்பது மானத் தமிழ் மக்களின் மதிப்பு மிக்க வாக்குகளால்தான்” எனத் தெரிவித்துள்ளார்.