உண்மையான சங்கிகள் திமுகவினர்தான்.. அதன் பொருள் என்ன தெரியுமா? சீமான் தாக்கு!
திமுகவினர் தான் உண்மையான சங்கிகள் என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
அண்மையில் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒரு அரசியல் உள்நோக்கமிருக்கிறது. அதுதான் அவர்களுக்கு பிழைப்புமாகவும் இருக்கிறது.
ஐயா ரஜினிகாந்தை நான் சந்தித்ததை வைத்து, என்னை ‘சங்கி’ என முத்திரைக் குத்தினார்கள் திராவிடக் கருத்தாக்கிகள். இதே ஐயா ரஜினிகாந்தை வைத்து, ‘கலைஞர் எனும் தாய்’ எனும் நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
நாணய வெளியீட்டு விழாவுக்கும், இன்னப் பிற நிகழ்வுகளுக்கும்கூட அவரை அழைத்தார். அப்போதெல்லாம் ஐயா ஸ்டாலின் சங்கியாகவில்லையா? வெங்கையா நாயுடு ஐயா கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார்; ராஜ்நாத் சிங் ஐயா கருணாநிதியின் நாணயத்தை வெளியிடுகிறார்.
கூடவே நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின். உண்மையில், ‘சங்கி’ என்பதற்கு நண்பன் எனும் பொருளிருக்கிறது. இராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்த்த துளசிதாசர், ராமனுடைய நண்பன் அனுமன் எனக் குறிப்பிடுவதற்கு, ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்.
சங்கி
‘சங்கி’ என்றால், ‘பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவர்’ எனும் பொருளும் பாலி மொழியில் இருக்கிறது. தற்காலச்சூழலில், ‘சங்கி’ என்பதை சங் பரிவார் அமைப்புகளையும், அவர்களோடு உறவு வைத்திருப்பவர்களையும் குறிக்கிற அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஐயா ரஜினிகாந்த் உடனான சந்திப்பை வைத்து என்னை, ‘சங்கி’ என்றதற்கு, ‘நண்பன்’ எனும் பொருள் இருப்பதைக் குறிப்பிட்டேன். உள்நோக்கம் கொண்ட அந்த அரசியல் அவதூறைக்கூட ‘நண்பன்’ எனும் வேறு பொருள்பட நான் எடுத்துக் கொள்வதாய் கூறினேன்.
அதேசமயம், சங் பரிவார் அமைப்புகளைக் குறிக்கிற வகையில், ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்தும்போது அது திமுகவுக்குத்தான் பொருத்தமானதாக இருக்குமென்பதைக் கூற,
‘உண்மையான் சங்கி திமுகதான்’ என அச்செய்தியாளர் சந்திப்பிலேயே தெளிவாகக் குறிப்பிட்டேன். ஆனால், என் பேச்சை வழக்கம்போல வெட்டி ஒட்டி, திரித்துவிட்டார்கள். இப்போதும் சொல்கிறேன் உண்மையான் சங்கிகள் திமுகவினர்தான்.