நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுவதாக நினைப்பது ஆபத்தானது - சீமான் பேச்சு
seeman says acting only qualified for rule country: நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுவதாக நினைக்கும் எண்ணம் ஆபத்தானது என சீமான் பேசியுள்ளார். .
சீமான் பிரச்சாரம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் என களத்தில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மு.கார்த்திகாவை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், "ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு கட்சியில் சேர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இது தவறான ஒன்று. மக்களின் வரிப்பணம் இடைத்தேர்தலுக்காக வீணடிக்கப்படுகிறது.
வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கே உண்மையாக இல்லாதவர்கள், எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாங்கள் அரசியலுக்கு வந்த போது நல்ல சித்தாந்தத்தை முன்வைத்து மக்களை ஒன்று திரட்டி, மிகப்பெரிய அரசியலை உருவாக்கிட முடியும் என நம்பினோம். ஆனால், சித்தாந்தங்கள் அவசியமில்லை, சினிமாவே போதுமானது என்பது நிரூபணமாகியுள்ளது.

கருத்தியல் புரட்சியால் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என நினைத்தோம், ஆனால் திரை கவர்ச்சியால் தான் வெல்ல முடியும் என்பதை காலம் நிரூபித்துள்ளது. அதனை மாற்ற வேண்டும் என நினைக்கிறோம். அதற்கான களமாக இந்த இடைத்தேர்தலை பார்க்கிறோம்.
இந்தியாவின் எந்த மாநிலத்தில் சினிமா இல்லை. ஆனால் இங்கு மட்டும் சினிமாவே சித்தாந்தமாகி, எல்லாமும் ஆகி விட்டது. சினிமாவில் நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுவதாக நினைக்கும் எண்ணம் இருக்கே, அது ஆபத்தான ஒன்று" என பேசியுள்ளார்.