காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் தமிழ் பற்றுதான் - சீமான்
தமிழ்நாட்டை தமிழர் ஆள 2026 ல் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
மதுரை திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய அவர், பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் உலகின் மூத்த மொழி தமிழ் என்று பேசி வருகிறார். முதல்வர் அமெரிக்கா சென்று அங்குள்ள தமிழர்களிடம் தமிழின் பெருமை பற்றி பேசுகிறார். ஆனால், தமிழகத்தில் என்றாவது பேசியதுண்டா?
காமராஜர்
தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகள் எல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளது. காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம். உலகில் எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் ஒன்றுதான் இறைவனால் பாடப்பட்டது.
நான் அரசியலில் வருவதற்கு முன் தொலைக்காட்சிகளில் லைவ் என்று ஓடியது. நான் வந்த பிறகுதான் நேரலை என்று ஓடுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் படித்தால்தான் தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்ற நிலையை உருவாக்குவோம். இந்தி படித்தால் எல்லா இடங்களிலும் வேலை கிடைத்து விட்டதா?
ஹிந்தி படித்தவன் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நுழைந்து விட்டான். மக்கள் விழிப்படையாவிட்டால் இந்தி படித்தவன் நாட்டை ஆள வந்து விடுவான். தமிழ்நாட்டை தமிழர் ஆள 2026 ல் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என பேசினார்.