ஈழ விடுதலைக்கு அமெரிக்கா தீர்மானம் - இந்தியா ஆதரவளிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

Naam tamilar kachchi Government Of India Seeman
By Karthick May 21, 2024 04:37 AM GMT
Report

ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள அறிக்கையில்,

ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. காலங்காலமாக அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு கடைசி சொட்டு கண்ணீரும் கானல் நீரான இனத்திற்கு, தூரத்தில் தெரியும் ஒரு சிறு வெளிச்சமும் புதிய நம்பிக்கையையும், மகிழ்வினையும் அளிக்கிறது.

seeman request to indian government eezha tamizhar

ஈழ இனப்படுகொலை நடைபெற்ற 15 ஆம் ஆண்டு நினைவுநாட்களை முன்னிட்டு ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினரான வைல்லி நிக்கல் சக 6 உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கை இனக்கொடுமைகளுக்கு சனநாயக வழியில் நிரந்தரத் தீர்வுகாண ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அதிமுக்கிய தீர்மானத்தைப் பேரவையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். H-RES1230 என்றழைக்கப்படும் அத்தீர்மானம், ஈழத் தமிழர்களுடனான இராசதந்திர உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க அரசினை வலியுறுத்துகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன் தமிழர்களும், சிங்களவர்களும் இறையாண்மை கொண்ட இரண்டு தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்ததையும், 1833ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களை இணைத்து பிரித்தானிய அரசு ஒற்றை ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த வரலாற்றையும், அத்தீர்மானம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

seeman request to indian government eezha tamizhar

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தமிழர்களின் கருத்துக்களைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலின்றிக் கொண்டுவரப்பட்டது என்பதையும், அதனை அன்றைய தமிழர் தலைவர்கள் நிராகரித்ததையும் சுட்டிக்காட்டியுள்ள அத்தீர்மானம், தமிழர்களின் உரிமைபெற்ற நல்வாழ்விற்கு 13வது திருத்தம் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதையும் பதிவு செய்துள்ளது. மேலும், இலங்கை இனவாத அரசு தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதையும், தமிழர்களின் தாயகத்தை, தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசமாகவே இன்றளவும் வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் எதிர்காலம் - அரசிற்கு சீமான் வலியுறுத்தல்

கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் எதிர்காலம் - அரசிற்கு சீமான் வலியுறுத்தல்


இறையாண்மையுள்ள, மதச்சார்பற்ற தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காகவே 1976ஆம் ஆண்டு தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அத்தீர்மானம் நினைவு கூர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, 2006ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்ற அமெரிக்க அரசின் துணைச்செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறைமுகமாக அங்கீகரித்ததை மேற்கோள்காட்டி ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த அத்தீர்மானம் திடமாக வலியுறுத்துகிறது. இத்தனை தெளிவுமிக்கத் தீர்மானத்தை கொண்டுவந்த வைல்லி நிக்கல் மற்றும் அவருடைய சக உறுப்பினர்களுக்கு என்னுடைய அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் நிறைவேற்றித் தருவதோடு, ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான முன்னெடுப்புகளை தொடங்க வேண்டுமெனவும் தமிழினம் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.  

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்குள்ளாகி, 15 ஆண்டுகளாக அதற்கான நீதிகேட்டு பன்னாட்டு மன்றங்களில் உலகத் தமிழினம் இடையறாது போராடியும் இதுவரை எவ்வித நீதியும் கிடைத்தபாடில்லை. துயர்மிகு இச்சூழலில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத அமெரிக்க உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளெல்லாம் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்தின் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து, தனித்தமிழீழ விடுதலையே தமிழர்களுக்கான இறுதி தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஈழத்தாயகத்துடன் தொப்புள்கொடி உறவுகொண்டுள்ள இந்தியப் பெருநாடு சிங்கள இனவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படுவது தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். இந்திய அரசின் இத்துரோகச்செயல்பாடுகள் அனைத்தும் 8 கோடி தமிழர்களின் இதயங்களில் இந்தியன் என்ற உணர்வு முற்றாக அற்றுபோகவே வழிவகுக்கும்.

seeman request to indian government eezha tamizhar

ஈழத்தில் ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கற்பனைக் காரணங்களை கூறி விடுதலை புலிகள் மீதான தடையை தொடர்ந்து இந்தியா நீட்டித்து வருவது ஏன்? அமைதிக்கு ஆயுதபோராட்டமே தடையாக உள்ளது என்று, ஈழ விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க துணைநின்ற இந்திய அரசு, இனவழிப்பு போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் இலங்கை இனவாத அரசிடமிருந்து குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தை கூட பெற்றுத்தர முடியவில்லை என்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு நிகழ்ந்த மிகப்பெரிய தலைகுனிவாகும். இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவு கொள்கை மிகத்தவறானது என்பதையே இத்தகைய அரசியல் தோல்விகள் காட்டுகிறது.

இத்தனைக்கும் பிறகும் சீனாவுடன் தொடர்ந்து நட்பு கொண்டாடி, இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டு வரும் இலங்கையை, தொடர்ந்து இந்திய அரசு ஆதரிப்பது வெட்கக்கேடானது. எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இலங்கை உருமாறும் என்பதை இந்திய ஒன்றிய அரசு தற்போதாவது உணர்ந்து, இலங்கையுடனான தமது வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றாவிடில் மிகப்பெரிய விலையை இந்திய பெருநாடு தர நேரிடுமெனவும் எச்சரிக்கிறேன்.

ஆகவே, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஈழத்தமிழ் மக்களே என்றென்றும் உறுதுணையானவர்கள் என்ற பேருண்மையை இந்திய ஒன்றிய அரசு இனியாவது உணர்ந்து, ஐக்கிய அமெரிக்கப் பேரவையில் கொண்டு வந்ததுபோல், ஐ.நா.மன்றத்தில் ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து உலக நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்ற உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஈழ விடுதலைக்குத் துணைநிற்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.