2026 தேர்தலுக்கு பின் அதிமுகவிற்கு ஆதரவா? சீமான் கொடுத்த விளக்கம்
அதிமுகவிற்கு ஆதரவளிப்பது குறித்து, சீமான் விளக்கமளித்துள்ளார்.
சீமான் ஆறுதல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த சகோதரர் மு.க.முத்து, நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரின் மறைவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்ற நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறினார்.
அதிமுகவிற்கு ஆதரவா?
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் பசியால் மயக்கமடைந்த போது, எனது உடல்நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். எனது தந்தை இறந்த போதும் அமைச்சரை அனுப்பிவைத்து ஆறுதல் தெரிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்பு, மாண்பு கருதி முதல்வருடன் சந்திப்பு நடந்தது.
கடுமையாக விமர்சிப்பது வேறு. நேரில் ஆறுதல் கூறுவது வேறு. பாஜகவும் காங்கிரஸ் எதிரெதிராக உள்ளன. ஆனால், டெல்லியில் அத்வானி, சோனியாவும் அருகில் அமர்ந்து தேநீர் அருந்தினர். கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிரெதிர் நிலையில் இருந்தாலும், அக்கட்சியினர் சந்தித்து மாநில நலன் குறித்து பேசுகின்றனர். இந்த நாகரீகம் இந்த மண்ணில் இல்லை. இது மீண்டும் மலர வேண்டும்" என கூறினார்.
அதிமுகவிற்கு பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை எனில் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, “இன்னும் 10 மாதங்கள் உள்ளது, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ராணுவத்திற்கு என ரகசியம் உள்ளதை போல எல்லாவற்றிற்கும் ஒரு ரகசியம் உள்ளது” என பதிலளித்துள்ளார்.