சீமானின் கட்சி தமிழகத்தில் பெரிய கட்சியாக உருவெடுக்கும்: வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளில், வரும் 6-ஆம் திகதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த கட்சி எந்நெந்த இடங்களை பிடிக்கும் என்பது குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பிரபல தமிழ் ஊடகமான தந்தி டிவி வரும் மார்ச் 5-ஆம் திகதி முதல் 28-ஆம் திகதி வரை தமிழகம் முழுவதும், சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பை நடத்தியது. இதில், முதல் கட்டமாக 50 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. அதில், 34 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்றும், 12 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உள்ளது.
உதாரணமாக, திமுக, அதிமுக, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்டவை வாக்கு வங்கியைப் பராமரித்து வரக்கூடிய தொகுதி தஞ்சாவூரில், 44 முதல் 50 சதவீத வாக்குகளை பெற்று திமுக வெல்லும் என்றும், அதிமுக 38 முதல் 44 சதவீத வாக்குகளை பெறும் எனவும் அதே நேரம் நாம் தமிழர் கட்சி 5 முதல் 8 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் உள்ள தேமுதிக இங்கு. 3 முதல் 6 சதவீதம் வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பிடிக்கிறது. அதே போன்று பூம்புகார் தொகுதியில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தையும், மக்கள் நீதி மய்யம் கூட்டணி நான்காவது இடத்தையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஐந்தாவது இடத்தையும் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெல்லக் கூடும் என்றும் அதேநேரம் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி நான்காவது இடம் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் 47 சதவீத வாக்குகளை பெற்று வெல்ல கூடும் என்றும், நாம் தமிழர் அதிகபட்சம் 7 சதவீதம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும் இந்த தொகுதியில் ஏறத்தாழ அதே வாக்குகளைப் பெறுகிறது. செஞ்சி தொகுதி, கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, திருவண்ணாமலை தொகுதி , ஆம்பூர் தொகுதி, நிலக்கோட்டை தொகுதி உள்ளிட்டவற்றில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.