ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி - சீமான் அறிவிப்பு

Seeman Tamilnadu Local Body Election
By Thahir Sep 16, 2021 06:37 AM GMT
Report

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்திட மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைந்து களப்பணியாற்றவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி - சீமான் அறிவிப்பு | Seeman Ntk Local Body Election Tamilnadu

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: 

"என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!கடந்த சட்டமன்ற தேர்தல் 2021, நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக அமைந்தது.

பெரிய பொருளாதார வசதிகள், குடும்பப் பின்புலம் இன்றி, சாதி-மத உணர்வைச் சாகடித்து, நாம் தமிழர் என்று ஒன்றுதிரண்டு நம் தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்காக நேர்மையோடும் நெஞ்சூறுதியோடும் நாம் சிந்திய கடின உழைப்பு ஒருபோதும் வீண்போகாது.

பேரறிஞர் வால்டேர் கூறியது: "எப்போதும் வெற்றிக்கான அடித்தளம் உழைப்பின் வியர்வையில் இருக்கிறது" என்கிறார் பேரறிஞர் வால்டேர்.

எதனாலும் ஒப்பிட முடியாத ஈடுஇணையற்ற உழைப்பினை வழங்கி நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அரசியல் அமைப்பினையும், நமது எண்ணத்திற்கு ஏற்ப கிடைத்திட்ட சின்னமான விவசாயி சின்னத்தையும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்து, நமது வெற்றிக்கான அடித்தளத்தை மிகவும் வலிமையாக அமைத்துள்ளோம்.

ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்குக் காட்ட இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 50 விழுக்காடு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய சாதனையை நாம் நிகழ்த்தி இருக்கிறோம்.

பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லாக் கட்சிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்புகள்

தமிழர் நிலத்தில் காலம் காலமாய்ப் புறக்கணிக்கப்பட்ட பல எளிய சமூகங்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என இதுவரை ஆண்ட, ஆள்கின்ற கட்சியினர் எவரும் செய்யத் துணியாத புரட்சிகரச் செயல்களைக் கடந்த சட்டமன்றத்தேர்தலில் நாம் துணிந்து செய்திருக்கிறோம்.

'அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும்; அதை நிறைவு செய்யும் சேவையும் தான்' என்பதனை உணர்ந்து, 60 ஆண்டுக் கால அரசியல் சீரழிவை பற்றிப் பேசியும், காடு, மலை, அருவி, ஆறு, ஏரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதையும்,

இந்நிலத்தின் கனிம வளங்கள் யாவும் கொள்ளையடிக்கப்படுவதையும், அதனால் ஏற்படவிருக்கும் சூழலியல் பேரழிவுகள் குறித்தும் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து, உண்மையான மாற்று அரசியல் என்றால் என்ன என்பதனை மக்களின் மனதில் பதிகிற அளவு உரத்த குரலில் முழங்கி, நாம் ஆற்றிய அரசியல் பணிகள் தமிழ்த்தேசிய இன விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

அதிகாரமும் பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகாலக் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கின்ற திராவிட, தேசியக் கட்சிகளைப் போன்று வாக்குக்குப் பணம் கொடுக்காமலேயே, அவர்களுக்கு எதிராக 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட எளிய வாக்காளர்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை நமக்குப் பெற்றுத் தந்திருப்பது பணம், பதவி, புகழ், அதிகாரம் என எதற்கும் உடன்படாத நமது நேர்மையும் போர்க்குணமும் தான் என்றால் மிகையல்ல.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு, வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வழமைபோல மக்களையும், உன்னதமான தத்துவத்தையும் நம்பி தனித்துக் களமிறங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.