பெண்களுக்கு சமவாய்ப்பு கொடுத்தது நாம் தமிழர் கட்சி மட்டுமே: சீமான் நெகிழ்ச்சி
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முத்துப்பேட்டையில் பிரசாரம் செய்த போது அவர் பேசுகையில், ஆட்சியில் உள்ள கட்சியை மாற்றி இன்னொரு கட்சியை ஆள வைப்பதல்ல மாற்றம். நாங்கள் ஆள் மாற்றத்துக்கோ ஆட்சி மாற்றத்துக்கோ வந்தவர்கள் கிடையாது.
அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வந்தவர்கள். அதனால் நாங்கள் முன் வைக்கிற அரசியலை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒரு மாறுதலை கொண்டுவர வேண்டும். ஒரு நாட்டின் வளத்திலேயே சிறந்த வளம் கல்வி வளம்தான். கல்வி மனித உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் கல்வியில் நமது மாநில உரிமையை மத்திய அரசிடம் விட்டு கொடுத்து விட்டனர். அவர்கள் புதிய கல்விக்கொள்கை ஒன்றை கொண்டு வருகின்றனர்.
8 வயதிலேயே பொதுத்தேர்வு எழுத சொல்கிறார்கள். இதேபோல பல தேர்வுகளை எழுத மாணவர்களை வற்புறுத்தும் தலைவர்கள் ஒருவரும் தேர்வு எழுதவில்லை. எல்லாவற்றுக்கும் தேர்வு என்றால் நாட்டை ஆள்கிற பிரதமர் என்ன தேர்வு எழுதினார்? நாட்டை ஆள்கிற பிரதமர், முதல்-அமைச்சர் ஏன் தேர்வெழுதவில்லை? சமூக அறிவியல், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம், வேளாண்மை உள்ளிட்டவற்றில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் மந்திரியாக முடியும் என சட்டம் போட வேண்டும்.
கல்வியிலும் மாற்றம் தேவை. ஏப்ரல் 6-ல் மாற்றம் தெரியும். நாம் தமிழர் கட்சி யாரோடும் கூட்டணி வைக்கவில்லை. வைக்க முடியாது. எங்கள் கொள்கையும், கோட்பாடும் அப்படிப்பட்டது.
பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க நினைத்து 117 இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளோம். இதை மற்ற கட்சியினரால் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.