100 நாள் வேலை திட்டம்; எதிர்க்கும் சீமான் - வேலை கேட்டு போராடும் அவரது தாயார்
100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டுமென சீமானின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டம்
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் என்ற பெயரில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூர் கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது.
சீமான் தாயார்
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அரணையூர் கிராம மக்கள் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்களுடன் சீமானின் தாயார் அன்னம்மாளும் சென்றிருந்தார். 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். சீமானின் தாயாரும் நாம் தமிழர் கட்சி கட்டிய காரில் ஏறி சென்றார்.
சீமான் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 100 நாள் வேலை திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். "விவசாயத்தை காக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும். இந்த திட்டத்தில் எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.
கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள். பெண்கள் பல்லாங்குழி ஆடுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிறார்கள். ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் இல்லை என்ற நிலை உள்ளது" என சீமான் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் அவரது தாயார் இந்த திட்டத்திற்கு கோரிக்கை வைத்ததை மாற்று கட்சியினர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.