1 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை; கைதுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் - சீமான்!
சீமானிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாலியல் புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் காவல் நிலையம் வந்தார். அவரிடம் வழக்கு தொடர்பாக சுமார் 63 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீமானிடம் சுமார் ஒரு நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு அழைப்போம் என்று கூறினார்.
விசாரணை நிறைவு
நான் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தேன். என் மீது புகார் அளித்த நடிகைக்கும், எனக்கும் இடையே திருமணம் குறித்த எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. நான் அந்த நடிகையிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், 7 முறை கரு கலைப்பு செய்ததாகவும் கூறுவதை உறுதிப்படுத்தாமல் பதிவு செய்திருக்கக் கூடாது.
இந்த நாடகத்தின் திரைக்கதை ஆசிரியர் யார்? பெரியாருக்கு எதிராக நான் பேசியதால் என்னை கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. நான் கைது, மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். அது அவர்களுக்கு நன்றாக தெரியும். தமிழக முதல்-அமைச்சருக்கு இன்று பிறந்தநாள்.
அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி என்னை விட அதிக துணிச்சல் கொண்டவர். எங்கள் வீட்டில் எதைப் பற்றியும் நாங்கள் விவாதிக்கமாட்டோம். எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன.
என்னையும், என் குடும்பத்தையும் 15 ஆண்டுகளாக அவமானப்படுத்துகிறீர்கள். எங்களிடம் சிறந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த வழக்கை பார்த்துக் கொள்வார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.