முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாக திறப்பதா, தமிழக அரசு வாய் மூடி இருப்பதா ? - கொந்தளித்த சீமான்

seeman keralagovernment dam mullaiperiyaru
By Irumporai Oct 30, 2021 06:32 AM GMT
Report

 முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறப்பது தமிழ்நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டத் தாக்குதல் என்று சீமான் கூறியுள்ளார். கேரள அமைச்சர்களின் செயலை நியாயப்படுத்தி திமுக அரசு சப்பைக்கட்டு கட்டுவது வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுஞ்செயல் எனவும் சீமான்  அறிக்கைவெளியிட்டுள்ளார்.

சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் :

முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் கேரள அமைச்சர்களின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.

எவ்வித முன்னறிவிப்புமின்றி முல்லைப்பெரியாறு அணையின் நீரை வீணாகக் கடலில் கலக்கச்செய்து, பல்லாயிரக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றிலடித்துள்ள கேரள அரசின் அடாவடிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

முல்லைப்பெரியாறு நிலப்பகுதியை தமிழர்கள், கேரளாவிடம் இழந்தபோதும், அணைப்பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் இன்றளவும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

நீர் திறப்புப்பணிகளை தமிழகப் பொதுப்பணித்துறைதான் மேற்கொள்கிறது. ஆனால், இதுவரை இல்லாத நடைமுறையாக கேரளா மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் அத்துமீறி முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறந்திருப்பது தமிழ்நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலேயாகும்.

கேரள அரசின் இத்தகைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாது, கேரளாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்ததோடு, அதனை நியாயப்படுத்த முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வெட்கக்கேடானது. 

ஆகவே, இனியாவது திமுக அரசு விழித்துக்கொண்டு, உபரி நீர் என்ற பெயரில், முல்லைப்பெரியாற்றுப் பாசன நீரினைத் தேவையில்லாமல் கடலில் கலக்கச் செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கேரளாவின் அத்துமீறலை உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று சட்டப்போராட்டம் நடத்தி, இழந்த முல்லைப்பெரியாற்று உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.