இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு
2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் பேச்சு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து யாராவது கூட்டணிக்கு வந்தால் யோசிக்கலாம். ஆனால் யாரும் வரமாட்டார்கள்.
கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு வேண்டும் என்பர். என்னிடம் இந்த இரண்டுமே இல்லை. ஆகையால் கூட்டணி குறித்து கேள்விகளை கேட்காமல் விட்டுவிடுங்கள். இந்த கேள்விகளுக்கு நானும் பலமுறை பதில் அளித்துவிட்டேன் என தெரிவித்தார்.
அதேபோல் கடலூரில் பேசிய சீமான், “தேர்தலில் பல தோல்விகளை சந்தித்த கட்சி நாம் தமிழர் கட்சி. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். வரும் தேர்தலில் சீமானின் ஆட்டத்தை பார்ப்பீர்கள். 5வது முறையாக தனித்து போட்டியிடுவோம்.
மறைமுக அழைப்பா?
பொறுத்திருந்து பாருங்கள் என் ஆட்டம் எப்படி இருக்கும் என்று.. நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல, கூட்டணி வைத்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என்ன செய்து விட்டார்கள்? என் கட்சியினர் பிற கட்சிகளுக்கு செல்வதாக இருந்தால் எந்த கட்சிக்கோ செல்வதற்கு என் தம்பி விஜய் கட்சிக்கு போகலாம் என சொன்னேன்.
தவெக தலைவர் விஜய் இணைத்து கொள்ளமாட்டார் என தெரிந்து தான் அப்படி செல்லமாக சொன்னேன். என்னோடு என் தலைமையை ஏற்று, எங்கள் கொள்கைகளை ஏற்று வருபவர்களை வரவேற்போம். உயர்ந்த கொள்கையும் உயர்ந்த நோக்கமும் இருந்தால் கூட்டணி தேவையில்லை. நாங்கள் மண்ணையும் எங்கள் மக்களையும் நேசிக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
இந்திய- திராவிட கட்சிகளின் வகைகளில் சேராமல் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் இயங்குகிறது. இதனால் சீமானின் கருத்து விஜய்க்கு விடுக்கப்பட்ட மறைமுகமான அழைப்பா? என்ற கேள்வி எழுந்துள்ளது.