தேன் - உலகத்தரத்தில் ஓர் தமிழ்த் திரைப்படம்! - படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து
தேன் திரைப்பட குழுவினருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தம்பி கணேசு விநாயகன் இயக்கத்தில் வெளிவந்த ‘தேன்’ திரைப்படத்தைக் கண்டேன். உலகத்தரத்திற்கு உருவாக்கப்பட்டு, விருதுகள் பலவற்றைக் குவித்த அத்திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் பார்த்து ரசித்ததாக தெரிவித்துள்ளார்.

மலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தைக் கண்டால், இதுபோன்ற திரைப்படங்கள் மிகுதியாக வந்து தமிழ்த்திரையுலகை அலங்கரிக்க வேண்டுமெனும் பேராவல் கொண்டு எவரது மனமும் ஏங்கும். தமிழ்த்திரையுலகில் அரிதினும் அரிதாக வரும் மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்றாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு, அப்படத்தின் பாத்திரத்தேர்வு, கதை உருவாக்கம், காட்சியமைப்புகள், கதைக்களம், உரையாடல்கள், வசனங்கள் என யாவும் மிகச்சிறப்பான முறையில் அமைக்கப்பெற்று தலைசிறந்த படைப்பாக வெளிவந்திருப்பது கண்டு வியந்துபோனதாக கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தை மிகச்சிறப்பான முறையில் இயக்கிய தம்பி கணேசு விநாயகன், இதுபோன்ற படைப்புகளை உருவாக்கிட ஊக்கமளித்து, தயாரிக்க துணிந்த தயாரிப்பாளர்கள் அம்பலவாணன்
மற்றும் பிரேமா, சிறப்பான முறையில் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி சுகுமார், படத்திற்குப் பலம் சேர்த்திட்ட கலை இயக்குநர் மாப்பிள்ளை மாயபாண்டியன், வசனங்களை உயிரோட்டமாக
எழுதிய ராசி தங்கதுரை, காட்சியமைப்புக்கு ஏற்றவாறு, பின்னணி இசை தந்த இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ், பாத்திரங்களாகவே மாறி நடித்திட்ட தருண் குமார், அபர்ணதி என இத்திரைக்காவியத்தின்
உருவாக்கத்திற்கு உழைத்திட்ட அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த பாராட்டுகளும், உளப்பூர்வமான வாழ்த்துகளும்! என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.