தமிழ்நாடு எங்கள் தாய்நாடு; இந்தியா எங்கள் அண்டை நாடு : கொந்தளித்த சீமான்
பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராத்திய மீனவரது மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிற தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்? தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மராட்டியம், டையூ பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மராட்டிய மீனவர் உயிரிழந்ததற்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாக ஆற்றிய எதிர்வினை வியப்பளிக்கிறது.
மராட்டிய மீனவரது படுகொலைக்கு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கத் துணிகிற பாஜக அரசு, தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படும்போதும், படுகொலை செய்யப்படும்போதும் எவ்வித வினையுமாற்றாது வாய்மூடிக்கிடப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மராட்டிய மீனவரது படுகொலைக்காக பாகிஸ்தான் நாட்டுத்தூதரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவிக்கும் பாஜக அரசு, தமிழக மீனவரது படுகொலைக்குச் சிறுகண்டனமோ, வருத்தமோ, பாதிக்கப்பட்ட மீனவரது குடும்பத்தினருக்கு ஆறுதலோ தெரிவிக்காதிருப்பது தமிழர்கள் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையையே காட்டுகிறது.
பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராத்திய மீனவரது மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிற தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்? தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா?https://t.co/Y5Jd8nmAGe pic.twitter.com/3Ssk11g3Mx
— சீமான் (@SeemanOfficial) November 11, 2021
கேரளாவில் இரு மீனவர்கள் இத்தாலிக்கடற்படையினரால் கொல்லப்பட்டபோது அம்மாநில அரசு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அப்படுகொலை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றம்வரை கொண்டு சென்றது.
இங்குக் கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறுஉடற்கூராய்வு செய்யகூட மாநில அரசு மறுத்ததோடு, அவரது உடலை உறவினர்களுக்குக் காட்ட மறுத்து பெருங்கொடுமையை அரங்கேற்றியது.
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யும் சிங்கள அரசோடு உறவுகொண்டாடும் பாஜக அரசையும், அதனைக் கண்டிக்காது, அநீதிக்குத் துணைபோகும் திமுக அரசையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
மீண்டும் மீண்டும் இந்நிலையே தொடருமானால், ‘தமிழ்நாடு எங்கள் தாய்நாடு; இந்தியா எங்கள் அண்டை நாடு’ எனக்கருதுகிற மனநிலைக்கு அது தமிழர்களைத் தள்ளிவிடும் என எச்சரிக்கிறேன்.
ஆகவே, தமிழக மீனவர் ராஜ்கிரண் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர இந்திய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், மீனவர் ராஜ்கிரண் உடலைத் தோண்டியெடுத்து மறு உடல்கூராய்வு செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.