ஈழ உணர்வாளர் குமரேசன் மறைவுக்கு சீமான் அஞ்சலி

Seeman Naam Tamizhar Eezham
By mohanelango May 20, 2021 06:20 AM GMT
Report

சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்கு ஈழ உறவுகள் பலியாவதைக் காணச் சகிக்காது, தமிழர்களுக்கு உணர்வுச்சூடேற்ற தனது உடலில் நெருப்பைக் கொட்டித் தன்னுயிரையே சுடராக்கிய தழல் ஈகி அன்புத்தம்பி வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களைப் பெற்றெடுத்த தந்தையார் அப்பா குமரேசன் அவர்கள் உடல்நலக்குறைப்பாட்டால் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். நாம் தமிழர் கட்சி அரசியல் பேரியக்கமாக உருவெடுத்த இன எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்த அவர், நடைப்பெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் களத்திலும் எம்மை ஆதரித்து, நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டுமென துணைநின்று வலு சேர்த்தவராவார்.

அவரது மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி, ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பாக மாறியிருக்கிறது. இனத்திற்காக உயிரையே கொடையாகத் தந்த மகத்தான மகனை ஈன்றெடுத்த அப்பா குமரேசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!