நல்ல மனிதர் என அடக்கிவிட முடியாது.. விஜயகாந்த் ஆகச்சிறந்த மனிதர் - சீமான் புகழாரம்!
பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தை மனம் கொண்டவர் விஜயகாந்த் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேற்று முதலே நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்போது வியாகாந்தின் உடல் தீவுத்திடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை.
சீமான் புகழாரம்
கேப்டன் விஜயகாந்தின் தவசி படத்துக்கு வசனம் எழுதினேன். அப்போது அண்ணன் விஜயகாந்துடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றியவர் கேப்டன் விஜயகாந்த்.
எதற்கும் பயப்படமாட்டாரு. நல்ல மனிதர் என அவரை அடக்கிவிட முடியாது. ஆகச்சிறந்த மனிதர். பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தை மனம் கொண்டவர்.
இனி அவரைப்போல் நடிப்பதற்கும், சண்டை போடுவதற்கும் ஆட்கள் வரலாம். ஆனால். அவரைப்போல சிறந்த மனிதராக யாரும் வரமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.