தனியார் மயமாகும் அரசு போக்குவரத்துதுறை.. இது தான் திராவிட மாடல் சாதனையா? - சீமான் காட்டம்!
அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசு
தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில், 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு வந்த அரசுப்போக்குவரத்துத்துறையை முழுதாக திமுக அரசு சீரழித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படி முழுதாக வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்து அதிகாரத்தை அடைந்த திமுக,
தற்போது அதனை நிறைவேற்ற மறுப்பது போக்குவரத்து ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். பொதுப்போக்குவரத்தை முழுமையாக நம்பியுள்ள ஏழை-எளிய மக்கள், தொழிலாளிகள், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள், பெண்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படாமலிருக்க அரசு போக்குவரத்துக்கழகத்தைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.
சீமான்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்குதல், பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க முன்னுரிமை, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டுதல்,
இதர அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மருத்துவக் காப்பீடு, பணப்பலன் வழங்குதல், பேருந்துகளையும் - போக்குவரத்து பணியிடங்களையும்
ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிடுதல் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தரவேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.