பாஜகவின் மதவெறியின் உச்சம்.. நாடே சுடுகாடாக மாறிடும் - கொதித்த சீமான்!
மசூதி வன்முறையின்போது 5 பேர் கொல்லப்பட்டதுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான்
உத்தரபிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜாமா என்கிற மசூதி உள்ளது. இது 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக மது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவுபடி, மசூதியில் ஆய்வு நடத்தது. இரண்டாவது முறையாக நீதிமன்ற ஆணையர் ஆய்வுக்கு சென்ற போது, அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 4 பேர் பலியாகினர். 30 போலீஸார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷாஹி ஜமா மசூதியானது இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி
ஆய்வு நடத்திய குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய இசுலாமியப்பெருமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, 5 இசுலாமியர்களைச் சிறிதும் இரக்கமின்றி அம்மாநில பாஜக அரசு படுகொலை செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜமா மசூதி, 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் அமைக்கப்படுவதற்கு முன்பு அங்கு ஹரிஹர் கோயிலிருந்ததாகவும்,
அந்தக் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பதாகவும் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுத்தாக்கல் செய்யப்பட்ட அன்றே அவசர அவசரமாக விசாரித்த நீதிமன்றம்,
மதவெறி
மசூதி உள்ள இடத்தை அன்றைய தினமே ஆய்வு செய்ய வேண்டுமெனத் தீர்ப்பளித்து, அதற்கென, ஒரு குழுவை அமைத்தும் உத்தரவிட்டது. அதன்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டே அன்றே முதற்கட்ட ஆய்வும் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக மசூதியை ஆய்வுசெய்யக் கடந்த 24.11.2024 அன்று, ஆய்வுக்குழுவினர் வந்தபொழுது அங்குள்ள இசுலாமியப் பெருமக்கள் ஆய்வு செய்ய எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் உத்தரப்பிரதேச அரசு காவல்துறையை ஏவி, எதிர்ப்புத் தெரிவித்த இசுலாமியப் பெருமக்கள் மீது தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியதோடு, துப்பாக்கிச் சூடும் நடத்தியதில் 5 இசுலாமியர்கள் கொல்லப்பட்ட கொடுந்துயரமும் அரங்கேறியுள்ளது.
நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் செய்து ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாத பாஜக, இழந்த செல்வாக்கை மீட்கவே தற்போது மீண்டும் மதவாத அரசியலைக் கையிலெடுத்துள்ளது.
இந்த நாட்டிலுள்ள இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலங்களை ஒவ்வொன்றாக இடிப்பதென்றால் அது எங்கே போய் முடியும்? அயோத்தியோடு முடியட்டும் என்றுதான் நாட்டிலுள்ள அனைத்து இசுலாமியப் பெருமக்களும்
அயோத்தி தீர்ப்புக்குப் பிறகும் அமைதி காத்தனர். மீண்டும் மீண்டும் இசுலாமியப் பெருமக்களின் வழிபாட்டுத்தலங்களை அழித்தொழிக்கும் அநீதி தொடருமென்றால் இந்நாடு சுடுகாடு ஆவதை எவராலும் தடுக்க முடியாது.
அரசியல் சுயலாபத்திற்காக மதவெறியால் மக்களைப் பிரித்து, அதன் மூலம் அரசியல் வெற்றிகளைப்பெற்று, ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இசுலாமியர்களை அழித்தொழிக்கின்ற பாசிசப்போக்கினை பாஜக அரசு இனியும் கைவிடவில்லையென்றால்,
அது இந்தியப் பெருநாட்டை பேரழிவை நோக்கிச் இட்டுச்செல்லவே வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறேன். இந்த நாட்டில் சனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம்,
மனித உரிமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை உடைய ஒவ்வொருவரும் பாஜக அரசின் இத்தகைய பாசிசப்போக்கிற்கு எதிராக, அறப்போர் புரிந்திட முன்வர வேண்டுமென அழைப்புவிடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.