விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் நிறுத்தவேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman Condemns TVK Cadres for Criticizing Vijay Sethupathi- பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதற்காக ஜனநாயக அறை திறக்கப்பட்டு போட்டியாளர்கள் ஆளும் அணி, எதிர் அணி என இரு பிரிவுகளாக செயல்படுகின்றனர்.
ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் கலந்துரையாடி, நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களின் நிறை, குறைகளை அவர் சுட்டிக்காட்டுவார்.

இந்நிலையில், தலைமைப் பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம் என்றால் என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்சனைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணியினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை எனத் தெரிவித்தார்.
விஜய் சேதுபதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் முதலமைச்சர் விஜய்யை தாக்கிப் பேசியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெளியிட்டு பதிவு
பிக்பாஸ் 10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?
மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?
#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர்… pic.twitter.com/35RzihSat7
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 15, 2026
தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.
அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்! என தெரிவித்துள்ளார்.
ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது! Manithan
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகப்போகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல் IBC Tamil
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் : தமிழரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அரியநேத்திரன் வழக்கு தாக்கல்! IBC Tamil