கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்? - சீமான் கேள்வி

Seeman Tn government Mk stalin Naam thamilar katchi
By Petchi Avudaiappan Jul 09, 2021 03:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்பெண்ணையாற்றின் துணையாறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை என்ற பெயரில் மதகுகளின்றி மிகப்பெரிய அணையைக் கட்டிமுடித்துள்ள கர்நாடக அரசுக்கெதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்காது தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.

பதவி சுகத்திலும், அதிகார மமதையிலும் திளைத்து மக்களின் நலனை முற்றிலும் மறந்த அதிமுக அரசின் கொடுங்கோல் ஆட்சிமுறையும், ஆண்ட ஆட்சியாளர்களின் பச்சைத்துரோகமுமே கர்நாடக அரசின் இத்தகைய ஆதிக்கப்போக்குக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றப் பிறகும்கூட அதே நிலை நீடிப்பது என்பதும், தமிழக நீர்வளத்துறையமைச்சர் டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத் துறையமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசு அணை கட்டியது குறித்து எவ்விதக் கண்டனமோ, நடுவர்மன்றம் அமைப்பது குறித்து எவ்வித முன்நகர்வோ இல்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமின்றி, தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையும் வெளிக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

தேவையான கட்டுமானப்பொருட்கள் தமிழகத்திலிருந்து எப்படிக் கொண்டு செல்லப்பட்டது? எல்லையில் அதிகாரிகள் அதனை ஏன் தடுக்கவில்லை? அவ்வாறு கொண்டு செல்லப்படும்வரை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பிரதிகளான பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர்? அவர்களுக்குத் தெரியாமல் இது நடந்ததா? அல்லது அவர்களின் துணையோடு முறைகேடாக இது நடைபெற்றதா? என்ற எந்தக் கேள்விக்கும் பதிலில்லை.

தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இனியாவது விழிப்புடன் செயல்பட்டு, அத்துமீறிக் கட்டுப்பட்டுள்ள அணை குறித்தும், தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாகவும் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும், தென்பெண்ணையாற்று அணைபோல அலட்சியமாக இருந்துவிடாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட முயற்சிக்கும் மேகதாது அணையை எவ்வித சமரசமுமின்றிச் சட்டப்போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என சீமான் தெரிவித்துள்ளார்.