பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான சர்வதேசப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? – சீமான் கேள்வி
பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்படும் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் பிஞ்சுப்பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிவந்திருக்கும் செய்திகள் பேரதிர்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார்.
அங்கு படித்த மாணவிகள் நடந்த கொடூரங்களை விளக்கும் குரல் பதிவுகளும், கேள்வியுறும் செய்திகளும் ஈரக்குலையைக் கொதிக்கச் செய்திருக்கின்றன.
பள்ளி எனும் கல்விக்கட்டமைப்புக்கு அனுமதிபெற்று, எவ்வித விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாது ஆன்மீகத்தின் பெயரைச்சொல்லி, தன்னை கடவுளாக உருவகப்படுத்திக் கொண்டு கல்வி பயில வரும் ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியும், இதற்கெதிராகக் குரல் கொடுக்க முயல்வோர் மீது அடக்குமுறையை ஏவியும் ஒடுக்குவதுமெனப் பல ஆண்டுகளாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாபா சிவசங்கர் போன்றவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள் என சீமான் கூறியுள்ளார்.
மேலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும் அப்பள்ளி மீதும், சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்காது தமிழ்நாடு அரசு மெத்தனப்போக்கோடு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.