பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறியவர்கள் இலங்கை தாக்குதலுக்கு ஏன் கள்ள அமைதி? - சீமான் கேள்வி

Indian fishermen Seeman Pakistan India Sri Lanka Navy
By Karthikraja May 04, 2025 04:00 PM GMT
Report

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள், இலங்கை தாக்குதலுக்கு கள்ள அமைதி காப்பது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான்

தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

seeman

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே கடந்த 02.05.2025 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளபள்ளம், கோடியக்கரை, செருதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆனந்த், முரளி, சாமிநாதன், வெற்றிவேல் அன்பரசன் ஆகிய 5 மீனவச்சொந்தங்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கை கடற்கொள்ளையர்கள்

தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய - தமிழ்நாடு அரசுகளின் தொடர் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. 

இத்தனை காலமும் இலங்கை கடற்படையால் கொடுந்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மீது, இப்போது புதிதாக இலங்கை கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பது தமிழ் மீனவ மக்களுக்கு இன்னுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. 

seeman

இத்தனை குறுகிய கடற்பரப்பில் இலங்கை - இந்தியக் கடற்படைகளைக் கடந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கே மாயமாய் மறைந்தார்கள்?

தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டியதாக விரட்டி விரட்டி வேட்டையாடும் இலங்கை கடற்படைக்கு, தன் எல்லைக்குள் உலவும் கடற்கொள்ளையர்களைப் பிடிக்க திறனில்லையா? அல்லது கடற்கொள்ளையர்களாக வந்தவர்களே இலங்கை கடற்படையினர்தானா?

கள்ள அமைதி காப்பது ஏன்?

இந்தியக் கடற்படையால் இலங்கை கடற்படையிடமிருந்துதான் தமிழ் மீனவர்களைக் காக்க முடியவில்லை? இலங்கை கடற்கொள்ளையர்களிடமிருந்து கூடவா காக்கும் திறன் இந்திய இராணுவத்திற்கு இல்லை?

காஷ்மீர் முதல் கோடியக்கரை வரை சொந்த நாட்டு மக்களைக் காக்க முடியவில்லை என்றால் இந்த நாட்டிற்கு காலாட்படை எதற்கு? கடற்படை எதற்கு? இத்தனைக் கோடிகள் கொட்டி கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்தான் எதற்கு? 

seeman

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை தாண்டி இந்திய நாட்டு குடிகள் மீது தாக்குதல் நடத்தியவுடன் பதறி துடித்த பெருமக்கள், இலங்கை கடற்கொள்ளையர்கள் எல்லை தாண்டி தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு எந்த பதற்றமும் கொள்ளாமல் கள்ள அமைதி காப்பது ஏன்?

தமிழர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லையா? அல்லது உயிரிழப்புகள் நிகழ்ந்தால்தான் அதுபற்றி பேசுவீர்களா? அல்லது கோபமும், இரக்கமும்கூட எந்த நாடு தாக்கியது? தாக்கப்பட்ட மக்கள் யார் என்பதெல்லாம் பார்த்துதான் வருமா? என்று அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் பதிலுண்டா?

கச்சத்தீவை மீட்கும் நாடகம்

சொந்த நாட்டு மக்களைத் தாக்குவதிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தி காக்க முடியவில்லை என்றால் இலங்கையின் நட்பு இந்தியாவிற்கு எதற்கு? இந்திய நாட்டுக் குடிகளைத் தாக்கும் பாகிஸ்தானிடம் வரும் கோவமும், பகையும், இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இலங்கையிடம் வர மறுப்பதேன்?

வழக்கம்போல இன்னொரு கடிதம் எழுதுவதைத் தவிர, தமிழ் மீனவர்களைக் காக்க மாநில சுயாட்சி நாயகர் ஐயா ஸ்டாலின் அவர்களிடம் மாற்று திட்டம் ஏதாவது உண்டா? 

ஐந்து முறை திமுக தமிழர் நிலத்தை ஆண்ட பிறகும் கச்சத்தீவு மீட்கப்படவும் இல்லை; தமிழ் மீனவர் சிக்கல் தீர்க்கப்படவும் இல்லை எனும்போது கச்சத்தீவை மீட்கும் நாடகம் எதற்கு? 2026 தேர்தலுக்கா?

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் தமிழ் மீனவர்களைக் காக்க இனியேனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதோடு, பாதிக்கப்பட்ட ஐந்து மீனவச்சொந்தங்களுக்கும் உரிய மருத்துவம், துயர்துடைப்பு உதவிகளைச் செய்துதர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.