சூர்யாவுக்கு ஆதரவாக சீமான்: உதைக்கச் சொன்னவரை உதைத்தால் பணம் தருவதாக அறிவிப்பு
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ஜெய் பீம். இப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 2ஆம் தேதி ஆன்லைன் ஓடிடி தளமான அமேசன் பிரைம் இல் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளில் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவிடம் 9 கேள்விகளுக்கு விளக்கம் கேட்க, அதற்கு சூர்யா தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரூ.5 கோடி கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பாமகவினர் இப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, ‘நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். இனி சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்ய முடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும்’ என்றும் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நினைவுநாளுக்கான நினைவேந்தல் விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சீமான், ''அதை தவிர்த்திருக்கலாம். இந்தப் பிரச்சனை வெளியானவுடனே அந்த புகைப்படம் நீக்கப்பட்டு லட்சுமி உள்ள காலெண்டரை வைத்துவிட்டனர். இதை தொடக்கத்திலேயே செய்திருக்கலாம் என்பதுதான் எனது கருத்து என கூறினார்.
மேலும் சூர்யாவை தாக்குவது, தரக்குறைவாகப் பேசுவது அநாகரிகமானது. அந்த மாதிரியெல்லாம் பதிவிடக் கூடாது. எனக்குத் தெரிந்து இதில் சூர்யாவிற்கு சம்பந்தம் இருக்காது. அவர் கதை கேட்டிருப்பார், நடித்திருப்பார். ஆனால் பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது கலை இயக்குநர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்கள்தான் பார்ப்பார்கள் என சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேவையில்லாமல் அவர்களை மிதியுங்கள் உதையுங்கள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சூர்யாவை உதைக்கச் சொன்னவரை வேண்டுமானால் உதைங்க, நான் காசு தருகிறேன்'' என கூறினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.