எதுக்கு குதிக்கிற? என்னை மாதிரி தனிச்சு போட்டியிடுங்க பார்ப்போம்! -சீமான் ஆவேசம்
கடந்த 2018ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில், மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியனருக்கு இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பான வழக்கில் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான்,
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள கற்றுக் கொள்வது தான் ஜனநாயகம். சவுக்கு சங்கர் ஒரு கருத்து சொல்கிறார் என்றால், நீங்கள் தான் நிறைய சங்கரை வைத்திருக்கிறீர்களே. அவருக்கு எதிராக ஒரு கருத்து சொல்லுங்கள். அதை விட்டுட்டு தூக்கி கைது செய்து உள்ளே போடுவேன் என்றால் என்ன அர்த்தம்? எந்த வினைக்கும் எதிர்வினை இருக்கு ராஜா. இந்த உலகத்தில் எதுவும் நிலைத்து இருந்ததில்லை.

பேரறிவாளன் விடுதலையை கொண்டாட வேண்டாம் எனச் சொல்லும் அண்ணாமலை, அமித்ஷா, மோடிக்கும் குஜராத் கலவரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என இதே நாட்டின் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எப்படி பார்க்கிறார்? பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னைப் போல ஒரு முறையாவது மோடியை ஊடகவியலாளர்களை சந்திக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு எழுதச் சொல்பவர்கள்தான் முதலில் தேர்வு எழுத வேண்டும். இந்த நாட்டில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், காவலர்கள் என தேர்வு வைத்துத்தானே எல்லாரையும் தேர்ந்தெடுக்கிறோம். அவர்களை எல்லாம் நிர்வாகம் செய்யும் தலைவன் என்ன தேர்வு எழுதுகிறான்? எல்லாவற்றிற்கும் தேர்வு எழுதச் சொல்லும் நீங்கள் ஏன் ஒரு தேர்வையும் எழுதுவதில்லை? மோடி, அமித்ஷா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தேர்வு எழுதட்டும்.
மேலும், தமிழகத்தில் பா.ஜ.க தான் மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், நீங்க அப்படி சொல்லிக்க வேண்டியதுதான். நீங்க பெரிய கொம்பாதி கொம்பர் தானே. 2024 தேர்தலில் ஒண்ணு ஸ்டாலின் பின்னாடி நிப்பீங்க, இல்லைன்னா எடப்பாடி பழனிசாமி பின்னாடி நிப்பீங்க. என் மரத்துக்குக் கீழ, என் நிழல்ல வளர்ற குட்டைச் செடி நீ. அப்புறம் எதுக்கு குதிக்கிற. என்னை மாதிரி தனிச்சு போட்டியிடுங்க பார்ப்போம்.
திமுக, அதிமுகவை விட்ருவோம். பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி தனியா போட்டியிடுவோம். யார் முந்துறான்னு பார்ப்போமா எனப் பதிலளித்துள்ளார்.