இலங்கையுடனான உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் - வலியுறுத்திய சீமான்

Tamil nadu Sri Lanka Seeman China
By Sumathi Oct 18, 2022 08:11 AM GMT
Report

இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையுடன் உறவு 

சீனாவுடன் கூட்டு வைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டும் இந்திய ஒன்றிய அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறி சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய இலங்கைக்குத் துணை நின்றது.

இலங்கையுடனான உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் - வலியுறுத்திய சீமான் | Seeman Central Govt Cut Relationship To Sri Lanka

அந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்கப் பன்னாட்டு அரங்கில் ஆதரவளிப்பது, இராணுவப் பயிற்சியளிப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவியது என இலங்கையை நெருங்கிய நட்பு நாடாகக் கருதி, அத்தனை உதவிகளையும் இந்திய அரசு செய்துவந்த போதிலும், அந்த நன்றி சிறிதுமின்றி இலங்கை சீனாவுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராகவே தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

சீமான் கோரிக்கை 

விடுதலைப்புலிகளை அழிப்பதுதான் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றது என்று பேசிய பெருமக்கள், இனப்படுகொலையாளர்களுடன் கைகுலுக்கி கொண்டாடியவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? இலங்கையின் இந்த துரோகத்திற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? பாகிஸ்தானுக்கு எதிராகப் பாய்ந்துகொண்டு கருத்துகூறும் அப்பெருமக்கள்,

லடாக்கை ஆக்கிரமித்து, அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி, தற்போது இலங்கையிலும் படையைக் குவித்து இந்தியாவைச் சுற்றிவளைத்துள்ள சீனா குறித்தும், அதற்கு துணைநிற்கும் இலங்கை குறித்தும் வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன்? இந்தியா உண்மையிலேயே அவர்களுக்கு தாய் நாடாக இருந்திருந்தால் இந்நேரம் இலங்கை, சீனாவுக்கு எதிராக வாய் திறந்திருப்பார்கள்.

இந்திய அரசு

சொந்த நாட்டு குடிகளாகிய 10 கோடி தமிழர்களின் உறவையும், உணர்வையும்விட, 2 கோடி சிங்களர்களின் நட்பையே பெரிதாக மதித்து தமிழினத்திற்குப் பச்சைத் துரோகத்தைச் செய்தது இந்திய ஒன்றிய அரசு. இந்திய ஒன்றியத்தில் காங்கிரசு, பாஜக என எந்த அரசு அமைந்தாலும் இலங்கையுடன் நட்புறவை கடைபிடிக்கும் மிகத்தவறான வெளியுறவுக் கொள்கையை மட்டும் இன்றுவரை மாற்றியபாடில்லை.

அதற்கான விளைவுகளையே தற்போது இந்தியா அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவைவிட சீனாவையே முதன்மையான நட்பு நாடாகக் கருதி முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்து எள்முனை அளவும் கவலையின்றித் தனது துறைமுகங்களை சீனாவிற்குத் தரைவார்த்ததோடு,

சீனா முயற்சி

இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி சீன உளவுக்கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்து இந்தியாவின் முகத்தில் கரியையும் பூசியது. தற்போது அதைவிடப் பேராபத்தாக சீன இராணுவத்தையே தன் நாட்டிற்குள் அதிகளவில் குவிக்க அனுமதித்து, சீனாவின் ராஜதந்திர சூழ்ச்சிகளுக்குத் துணைபோய் இந்தியாவின் பாதுகாப்யையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழீழ மக்கள் இராணுவமான விடுதலை புலிகள் இயக்கம், தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஈழ மண்ணில் நிலைபெற்றிருந்த நாள்வரை, இலங்கைக்குள் எந்த இடத்திலும் சீனாவால் கால் ஊன்றவே முடியவில்லை என்ற உண்மையை இந்திய பெருநாட்டின் ஆட்சியாளர்கள் இப்போதாவது புரிந்து தெளியவேண்டும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் துணைபோனது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை என்பதை சமகால அரசியல் சூழல்கள் இந்தியாவிற்கு உணர்த்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் உண்மையான பாதுகாப்பு என்பது ஈழமும், தமிழர்களும்தானே தவிர இலங்கையும், சிங்களர்களும் அல்ல என்பதை இந்திய அரசு இனியாவது உணர்ந்து,

இலங்கையை நட்பு நாடு என்று கூறுவதைக் கைவிட வேண்டும். எதிர்காலத்தில் இந்தியாவின் தென்பகுதியைத் தாக்குவதற்கான ஆயுதப் படைத்தளமாக இலங்கையைப் பயன்படுத்த நினைக்கும் சீனாவின் முயற்சியை இந்தியா முறியடிக்காவிடில் மிகப்பெரிய இழைப்பை இந்தியப் பெருநாடு சந்திக்க வேண்டியிருக்குமென முன்கூட்டியே எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.