பெரியார் சொன்னது போல் ஏன் கர்ப்பப்பையை அறுக்கவில்லை? - சீமான் கேள்வி
பெரியாரால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்பட்ட நன்மை என்ன என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் வீடு முற்றுகை
பெரியார் குறித்து சீமான் பேசி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று(22.01.2025) சீமானின் வீட்டை முற்றுகையிட்டன பெரியாரிய அமைப்புகள்.
இதனால் அந்த பகுதியில் நூற்றுக்கும் மேலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். நாம் தமிழர் கட்சியினரும் அங்கு குவிந்திருந்தனர்.
நீதிமன்றத்தில் ஆதாரம்
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "பெரியார் கூறியதை பேசியதில் என்ன தவறு உள்ளது. இதில் தவறு இருக்கிறது என்றால் அதற்கு பெரியார் தான் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். பெரியார் குறித்த பேச்சுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிப்பேன்.
சங்ககிரி ராஜ்குமார் யாரு? அவர் முதலில் என்னை நேரில் பார்த்துள்ளனரா? பேசியுள்ளாரா? அவரை வர சொல்லுங்க. அந்தப்படம் 15 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான போதே சொல்ல வேண்டியது தான? பெரியார்மேல் அடி விழுந்ததும் பிரபாகரன் பொய் என வருகிறீர்கள். மோதுவது என்று ஆகிவிட்டது. பார்த்து விடுவோம். பெரியாரா? பிரபாகரனா என்று மோதி விட வேண்டியது தானே?
நாம் தமிழர் கட்சி
கொளத்தூர் மணி என்பவர் நான் மதிக்கத்தக்க பெரியவர். அவர் சொல்கிறார் நாம் தமிழர் கட்சி பெயரை வாங்க துக்ளக் சோவையும் குருமூர்த்தியையும் கூட்டி சென்று சிவந்தி ஆதித்தனாரிடம் வாங்கி வந்தேன் என சொல்கிறார். உங்கள் உடன் இருந்து வளர்ந்தவன் என்பதால், நான் எதிர்த்து உங்களை பேச மாட்டேன் என்கிற ஒரே தைரியத்தில்தானே இத்தனையையும் பேசுகிறீர்கள். சோவுக்கும், குருமூர்த்திக்கும் நாதகவுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது?
தமிழ் சனியன், தமிழ் முட்டாள்களின் மொழி தமிழில் ஆங்கிலம் கலந்து பேசவேண்டும், தமிழில் என்ன இருக்கிறது என்று கூறினார் பெரியார். அதை சொல்ல நீங்கள் யார்? நீங்கள் கன்னடர். கர்நாடகாவில் பிறந்தவர் என நீங்களே கூறி உள்ளீர்கள் இந்தியாவில் பல மொழிகள் இருக்கும் போது தமிழில் மட்டும் ஒன்றும் இல்லையா? தமிழர்களை சூத்திரன் என சாஸ்திரம் சொல்லி விட்டது என கூறுகிறார்.
தமிழன் சூத்திரனா?
அதில் தமிழன் சூத்திரன் என்ற வரி உள்ளதா? ஏன் திராவிட கூட்டத்தில் எவனும் சூத்திரன் இல்லையா? இந்தியா முழுமைக்கும் உள்ள தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் சூத்திரர்கள் இல்லையா? தமிழன் மட்டும் சூத்திரனா என்ன வேலை இது?
உன் மனைவி என்ன உப்பு மிளகாயா? வேறொருவனுடன் சென்றால் குற்றம்னு சொல்லுவியா என பேசியுள்ளார். தாலி பெண்களை அடிமைப்படுத்துகிறது. தாலி அடிமையின் சின்னம், அதை அறுத்து எறியுங்கள் என கூறினார் பெரியார். அதை ஏற்று பொது மேடையில் வைத்து திராவிட கழகம் தாலியை அறுத்து எறிகிறது.
பெண்கள் பிள்ளை பெற்றெடுக்கும் எந்திரம் அல்ல கர்ப்பப்பையை வெட்டி எறி' என்றும் பெரியார் சொன்னாரே. ஆனால் நீங்கள் ஏன் பொது மேடையில் வைத்து ஒரு இடத்திலும் கர்ப்பப்பையை அறுக்கவில்லை? பெரியார் அடிப்படையிலே பிழையானவர். பெரியாரால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்பட்ட நன்மை என்ன?" என பேசினார்.