உதய சூரியன், இரட்டை இலை பிடிக்கும் என்றால் எங்களை சுடுகாட்டில் போடுங்கள்: சீமான் ஆவேசம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த தேர்தலைப் போல இந்தத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்து சந்திக்கிறது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சியின் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி என்று சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது, “பிளாஸ்டிக் இல்லாத நாட்டை நீங்கள் உருவாக்குங்கள். நான் சொல்வதையெல்லாம் திரும்ப திரும்ப சொல்லாதீங்க.
எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்து கொண்டு இன்னமும் பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று கூறிக்கொண்டிருப்பது நியாயமா?

நான் எழுப்புகிறேன்; எந்திரிக்கவே மாட்டேன் என்று சொல்பவர்களை எதுவும் செய்ய முடியாது. நான் ஓட்டுக்காக நிற்கவில்லை; நாட்டுக்காக நிற்கிறேன். நான் வாக்கை கேட்கவில்லை, வருங்கால தலைமுறைகளுக்கான வாழ்க்கையை கேட்கிறேன். அவர்கள் எதிர்காலத்திற்காக ஓட்டு போடுங்கள். விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.
வருங்கால தலைமுறையினரை வாழவைப்போம். உதய சூரியன், இரட்டை இலை தான் பிடிக்கும் என்றால் எங்களை சுடுகாட்டில் போடுங்கள். சீமானுக்கு ஓட்டு போட்டால் ஒரு கோடி ரூபாய் போய்விடுமா? திமுக, அதிமுக வெற்றி என்பது ஒரு நிகழ்வு. ஏற்கனவே நின்று வென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி. எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. அப்பன் தலைவன் இல்லை; வாரிசு அரசியலுக்கு வரவில்லை.
பொருளாதாரப் பின்புலம் என்று ஒன்றும் கிடையாது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. இந்த தேர்தலிலாவது மாற்றத்தை கொண்டு வாருங்கள்” என்று பேசினார்.