நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!
மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் நாசகாரத் திட்டமான நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதனைச் செயல்படுத்த முனைகிற கொடுஞ்செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
பல்லுயிர்ப்பெருக்க மண்டலமாக விளங்கக்கூடிய மேற்குத்தொடர்ச்சி மலையில் இயற்கையைப் பாதிக்கக்கூடிய எதுவொன்றையும் செயல்படுத்தக்கூடாதென ஐயா கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் அறிவுறுத்தி எச்சரித்திருக்கும் நிலையில், அங்கு நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைக்க முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்துக்காக மலை உச்சியிலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்குச் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும். இதற்காகப் பாறைகளைப் பிளக்கும் தொழில்நுட்பங்களாலும், வெடிமருந்துப் பொருட்களின் பயன்பாட்டாலும், கதிர்வீச்சுப்பொருட்களின் கலப்பாலும் நிலம், நீர், தாவரங்கள், வன உயிரினங்கள் தொடங்கி அத்தனையும் அழியக்கூடும்.
மேலும், மலைப்பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டால் எழும் தூசு மண்டலம் காற்றினை மிகப்பெரிய அளவில் மாசுபடுத்தும். இதற்கு முன்னர், நியூட்ரினோ ஆய்வு நடந்த பல நாடுகளில் அணுக்கதிர் வீச்சு அபாயங்கள் நிகழ்ந்துள்ளது. இதனை உணர்ந்தே, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வேளாண் பெருங்குடி மக்கள், பொதுமக்கள் எனப் பலரும் தீவிரமாக அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
எனினும், அவர்களின் எதிர்ப்பையும் மீறி, நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது ஒன்றிய அரசு. நியூட்ரினோ ஆய்வு கதிர்வீச்சினால் மனிதர்கள் மட்டுமின்றி, அங்குள்ள காடுகளுக்கும், அதில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, பல்லுயிர்ப்பெருக்கத்தை முற்றாக அழித்தொழிக்க வாய்ப்பிருப்பதாகச் சூழியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, மேற்குத்தொடர்ச்சி மலையைப் பாழ்படுத்தும் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படுவதை உடனடியாகக் கைவிடுவதற்குச் சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், ஜனநாயக வழிமுறைகளின் வாயிலாகவும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து, இத்திட்டத்தை முறியடிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும்!https://t.co/JW5is0aZaY pic.twitter.com/EQn23GYZpq
— சீமான் (@SeemanOfficial) July 2, 2021