மீண்டும் ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமானின் ட்விட்டர் கணக்கு தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருபவர் சீமான். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் இயக்குநராக இருந்த அவர் பின்னர் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய நாட்கள் முதல் இளைஞர்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. இதற்கு காரணம் சென்னை காவல்துறை தான் காரணம் என்று தகவல்கள் பரவின.
முதலமைச்சர் கண்டனம்
இதனிடையே சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கை உடனே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் செல்ல சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
காவல்துறை விளக்கம்
இந்தநிலையில், சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கை முடக்க எந்தவித பரிந்துரையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.
