அண்ணனுக்கு உறுதுணையாக நிற்க விஜய் கட்சி தொடங்கியிருக்கலாம் - சீமான் பேட்டி!
நடிகர் விஜய் கட்சி தொடங்குவது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
நிர்வாகிகள் கூட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருக்கும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "காங்கிரஸ், பாஜக என இருகட்சிகளும் எங்களுக்கு எதிரிதான்.
தேசியமே இல்லை என்பது எங்களது கோட்பாடு. அந்த இரு கட்சிகளுடனும் சண்டையிடுவேன். இந்த கட்சிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது.
மக்களை நம்பித்தான்
விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமானதாக இருக்கும். தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என அவர் நினைத்திருக்கலாம்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடியை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக மாறிய பின்பு அவரை வரவேற்பதும் தான் திமுக கொள்கை. திமுகவை ஒழிக்காமல் நல்லாட்சியை வழங்க முடியாது.
நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளேன். நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும், கூட்டணி கிடையாது. மக்களை நம்பித்தான் போட்டியிடுகிறோம்" என்றார்.