“ஆபீஸ்ல போய் வேலை பாக்கணும்” - ஆடி காரை திரும்ப கேட்ட பப்ஜி மதனின் மனைவி
தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆடி கார்களை திரும்ப ஒப்படைக்குமாறு பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடும் போது ஆபாசமாக பேசி அதனை யூடியூப்பில் பதிவேற்றி பணம் சம்பாதித்து வந்ததாக சேலத்தைச் சேர்ந்த மதன் மீது கடந்தாண்டு புகார் எழுந்தது. அவரின் ஆபாச பேச்சுக்கள் இணையத்தில் வைரலான நிலையில் மதனுக்கு உதவி புரிந்ததாக மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு பின் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசிய வீடியோ மூலம் கிடைத்த வருவாயில் 2 சொகுசு கார்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன.
இதனிடையே ஜாமீனில் வெளிவந்த கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்தப்போது தங்களிடம் சொகுசு கார் இல்லை என்றும் ஆடி ஏ 6 கார் மட்டுமே உள்ளது என்றும் தன் வீட்டு வாசலில் வேறு ஒருவரது சொகுசு கார் நின்றால் அது தனதாகிவிடுமா என கேள்வியெழுப்ப அது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஆடி கார்களையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு மதனின் மனைவி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சாப்ட்வேர் என்ஜினியரான தானும் தனது கணவர் மதன் யூடியூப் மூலமும் சம்பாதித்த காசில் ஆடி ஏ6 காரை ரூ.13 லட்சத்துக்கும், ஆடி ஆர் 8 காரை ரூ.47 லட்சத்துக்கும் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தனை நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்த தான் தற்போது அலுவலகம் செல்ல வேண்டியிருப்பதால் அந்த கார்களை ஒப்படைக்குமாறு அதில் கிருத்திகா கூறியுள்ளார்.