ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவு: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரம் எதிரொலியாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொ0ரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் நிலையில், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பலரும் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் உரிய நேரத்தில் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையானது ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தயாராக இருப்பதாகத் வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டமும் இன்று நடைபெற்றது. அதில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் தேதி நடைபெற்ற கருத்து கணிப்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக தூத்துக்குடியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயைணப்பு வாகனம், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா, டிரோன் மூலமாகவும் ஆட்சியர் அலுவலகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி உட்பட 5 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு ஏற்கனவே அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதுபோல் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2018 மே மாதம் 28ம் தேதி சீல் வைக்கப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் விவகாரத்தால் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.