சட்டப்பேரவை நூற்றாண்டு விழா : குடியரசுத் தலைவர் வருகை - சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு!
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அத்துடன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக சென்னை வருகிறார். இன்று காலை டெல்லியில் இருந்து 10 மணிக்கு புறப்படும் குடியரசுத்தலைவர் 12:45 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.

இதன் காரணமாக சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் சட்டமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படை ,தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக குடியரசுத் தலைவர் பயன்படுத்தக்கூடிய குண்டுதுளைக்காத காரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது .

தமிழ்நாடு சட்டப் பேரவையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு குடியரசு தலைவர் வருகை புரிய உள்ளதால் சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.