ரஷ்யா - உக்ரைன் இடையே 2 ஆம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி - தொடரும் போர் பதற்றம்
உக்ரைன் - ரஷ்யா இடையேயான 2 ஆம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகளும் வலியுறுத்து வருகின்றன.
அந்த் வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் தொடர்பாக நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவும் எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
அதேசமயம் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. சண்டை நடைபெறும் இடத்தில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டது. இதன்பிறகு ரஷ்யா தனது தாக்குதலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.