கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கிறார்கள் - காங்கிரஸ் எம்.பி உண்ணாவிரதம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 சட்டமன்றத் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பொன்னேரி (தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், குளச்சல், விளவங்கோடு, மேலூர், சிவகாசி, ஓமலூர், உதகை, காரைக்குடி, ஊத்தங்கரை (தனி), அறந்தாங்கி, விருத்தாச்சலம், உடுமலைப்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி), ஈரோடு (கிழக்கு), திருவாடானை, கோவை (தெற்கு), கிள்ளியூர், நாங்குநேரி, மயிலாடுதுறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளன.
இன்று (13.03.2021) காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத் அவரது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது - காங்கிரஸ் யாருக்கெல்லாம் சீட் கொடுக்க இருக்கிறது என எனக்குத் தெரியும். தான் உட்பட முக்கிய நிர்வாகிகள் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். இது எனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.