தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் - அறிகுறிகள் என்னென்ன?
தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஸ்க்ரப் டைபஸ்
தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ்(scrub typhus) எனப்படும் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “ஓரியன்டியா சுட்சுகாமுஷி” என்ற ஒட்டுண்ணியால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
அறிகுறிகள்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இதுபோன்ற நோய்கள் பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் பாதிக்கப்பட்டால் காய்ச்சல், உடல் வலி, தலை வலி குறிப்பாக கருப்பு காயங்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். குறிப்பாக விவசாய தொழிலில் ஈடுபடுபவர்கள், புதர் பகுதிகள் அதிகமுள்ள இடத்தில் வசிக்கும் நபர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சிகிச்சை
இந்த நோய் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நபர் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் ஐஜிஎம் ஆன்ட்டிபாடி, எலிசா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் அளித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த நோய் பற்றியான விழிப்புணர்வை அதிக அளவில் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.