வங்கதேசத்தை அசால்டாக வீழ்த்திய ஸ்காட்லாந்து - மிரண்டு போன கிரிக்கெட் உலகம்

டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. நேற்று நடந்த ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து-வங்காளதேச அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக மெஹதி ஹாசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதன்மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடர்களில் அந்த அணி பெறும் இரண்டாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்