தெறிக்கவிடும் கத்துக்குட்டி அணிகள் : பப்புவா நியூ கினியாவை வென்ற ஸ்காட்லாந்து
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடன், பப்புவா நியூ கினியா அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிகபட்சமாக பெர்ரிங்டன் 70 ரன்கள், மேத்யூ கிராஸ் 45 ரன்கள் விளாச 20 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது. பப்புவா நியூ கினியா அணி தரப்பில் மோரியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஜோஸ் டெவி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்காட்லாந்து அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.