அதிரடி நாயகன் கிரிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்த பாகிஸ்தான் வீரர் - ரசிகர்கள் மகிழ்ச்சி
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. துபாய் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஃபகர் ஜமான் 8 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன்பின் கூட்டணி சேர்ந்த பாபர் அசாம் – முகமது ஹபீஸ் ஜோடி ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு மளமளவென ரன்னும் குவித்தது. முகமது ஹபீஸ் 31 ரன்களிலும், பாபர் அசாம் 66 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் கடைசி மூன்று ஓவர்களில் ருத்ரதாண்ட ஆட்டத்தை வெளிப்படுத்திய சோயிப் மாலிக் 18 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள பாகிஸ்தான் அணி 154 ரன்கள் குவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டியில் 5 ரன்கள் எடுத்த போது நடப்பு ஆண்டில் 1665 ரன்னை பதிவு செய்த பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான முகமது ரிஸ்வான், டி.20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிரிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
கிரிஸ் கெய்ல் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற டி.20 போட்டிகளில் 1655 ரன்கள் அடித்திருந்தார், தற்போது இதனை முகமது ரிஸ்வான் முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.