இனி ஏசி தேவையில்லை - வெள்ளை பெயிண்ட் அடித்தால் போதும்
ஏசிக்கு பதிலாக அதே அளவு குளிர்ச்சியை தரக்கூடிய வெள்ளை நிற பெயிண்டை அமெரிக்கவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக்கூடத்தில் உலகிலேயே அடர் வெள்ளை நிற பெயிண்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது தூய வெண்மை நிறம் கொண்ட பெயிண்ட் என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.
உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மட்டுமே இந்த பெயிண்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள நிலையில், 1000 சதுர அடி கொண்ட மாடி பரப்பளவை இந்த பெயிண்டால் ஒரு கோட் அடிக்கும் போது ஏசி மூலம் 10 கிலோவாட் மின் ஆற்றலை எடுத்துக்கொண்டால் என்ன குளிர்ச்சி கிடைக்குமோ அது ஆற்றல் இல்லாமலே கிடைக்கும்.
இந்த பெயிண்ட் 98.1% அளவுக்கு சூரிய கதிர்வீச்சை பிரதிபலிப்பதுடன், இன்ஃபிரார்டு வெப்பத்தையும் தடுக்கிறது. இது பிரதிபலிக்கும் வெப்பத்தை விட மிகவும் குறைந்த அளவே வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த பெயிண்டை சந்தைப்படுத்துவதற்காக நிறுவனம் ஒன்றுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.